பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
தி.மு.க..வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி.
தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. சார்பில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும், பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அக்கட்சி ஆட்சியை பிடித்து ஓராண்டுக்கு மேலாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை கண்டித்தும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சிசார்பில் கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 60 மாவட்டங்களின் தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.அந்த வகையில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் பா.ஜ.க. சார்பில் தி.மு.க தலைமையிலான தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சர்தார்சிங், மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், ஓ.பி.சி.அணி மாநில செயலாளர் வக்கீல்.செல்வநாயகம், மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்தி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன், நகர தலைவர் சத்யா உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.