மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது
மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் உள்ள குருவிகொண்டான்பட்டி, ராங்கியம், பனையப்பட்டி, குழிபிறை, ஆத்தூர், விராட்சிலை உள்பட பல்வேறு கிராமங்களில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவர் குருவிகொண்டான்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமலாக்கத்துறை, அமைச்சர்கள் மீது சோதனை நடத்துவது எதிர்க்கட்சிகள் மீது ஏவும் ஆயுதமாக நான் கருதுகிறேன். இப்படிப்பட்ட ஒரு துறை தேவை இல்லை. அவர்களது பணி பண பரிமாற்றத்தை அறிந்து நடவடிக்கை எடுப்பது. வழக்கு போடுவது கிடையாது. அவர்களை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். பா.ஜ.க. எதிர்க்கட்சிகள் மீது மட்டும் தான் சோதனைகளை நடத்தி வருகிறது. பா.ஜ.க.வுடன் சேர்ந்தால் புனிதமானவர்கள், சேராதவர்கள் புனித மற்றவர்களாகி விடுகின்றனரா?. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 39-க்கு 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை தீர்க்கமாக சொல்லிக் கொள்கிறேன். பா.ஜ.க. மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என எண்ணுகிறது. அது முடியாது. சந்திரயான்-3-ஐ விண்ணுக்கு அனுப்பியது இந்திய விஞ்ஞானிகளுக்கு கிடைத்த வெற்றி. அதே நேரத்தில் இந்தியாவில் கழிவுநீர் கால்வாயில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்து வருகின்றனர். அதையும் பார்க்க வேண்டும். வரும் தேர்தலில் வலுவான கூட்டணிக்காக 26 கட்சிகளுடன் பேசி முடித்துள்ளோம். இது பலமான கூட்டணி. இது வெற்றி கூட்டணியாக அமையும் எனக் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.