கைதான என்ஜினீயர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி பா.ஜ.க.வினர் மனு
கைதான என்ஜினீயர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியினர் நேற்று கலெக்டர் கற்பகத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், கோனேரிபாளையத்தை சேர்ந்த சிவில் என்ஜினீயர் விமல் என்பவர் வீடுகள் கட்டி விற்பனை செய்து வந்தார். அப்போது அந்த வீடுகளின் கழிவறைகளில் சிறிய ரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அந்த வீட்டு பெண்களின் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். பின்னர் அவர் அந்த வீடுகளுக்கு பராமரிப்பு பணிக்கு சென்று பொருத்தியிருந்த கேமராக்களை எடுத்து, அதில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், மிரட்டியும் பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். ஏற்கனவே அவரது மனைவி கொடுத்த ஒரு புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் விமலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் பல பெண்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.