ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்


ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்
x

கைது செய்யப்பட்ட கருப்பு முருகானந்தத்தை விடுவிக்கக்கோரி ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்

கைது

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தையொட்டி தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பா.ஜ.க.வினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், தமிழ் தேசிய முன்னேற்ற கழகத்தினரும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பா.ஜ.க.வினர் ஒருபுறமும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறுபுறமும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நாஞ்சிக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க.வினர் சாலையின் தடுப்பு சுவரை சுற்றி மாலை அணிவிக்க சென்றபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்ததால் இரு பிரிவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீசார் கருப்பு முருகானந்தம் உள்பட பா.ஜ.க.வினர் அனைவரையும் கைது செய்தனர்.

சாலை மறியல்

மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் அக்கட்சியினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அமர்ந்து பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்தை விடுதலை செய்யக்கோரியும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் தடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தடை விதிக்க கோரியும் கோஷமிட்டவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜெயக்குமார், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story