தமிழகத்தில் பா.ஜ.க.வின் தந்திரம் பலிக்காது கே.எஸ்.அழகிரி பேட்டி


தமிழகத்தில் பா.ஜ.க.வின் தந்திரம் பலிக்காது கே.எஸ்.அழகிரி பேட்டி
x

தமிழகத்தில் பா.ஜ.க.வின் தந்திரம் பலிக்காது என்று வேலூரில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

வேலூர்

தமிழகத்தில் பா.ஜ.க.வின் தந்திரம் பலிக்காது என்று வேலூரில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

சிப்பாய் புரட்சி நினைவு தூண்

வேலூர் சிப்பாய் புரட்சி 216-வது நினைவு தினத்தையொட்டி வேலூர் மக்கான் சந்திப்பில் அமைந்துள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் அண்ணாசாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் உள்ள அனைத்துத்துறைகளிலும் பொதுத்துறையும், தனியார்த்துறையும் தேவை தான். இது அரசின் பொருளாதார கொள்கை. நாட்டில் காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் மற்ற கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை ஏற்று, அவர்கள் சொல்லும் வேட்பாளரை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஆனால் தேசிய கட்சியான காங்கிரசுக்கு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த முடியாத நிலை என்ற கருத்து, காங்கிரஸ் கட்சி மீது பலவீனத்தை ஏற்படுத்துவதற்கான பிரசாரமாக உள்ளது.

அக்னிபத் தவறான திட்டம்

அக்னிபாத் என்பது ஒரு தவறான திட்டமாகும். 4 ஆண்டுகளில் இளைஞர்கள் எதையும் கற்று கொள்ள முடியாது. இந்த திட்டம் மூலம் பா.ஜ.க.வுக்கு மட்டும் 2 விஷயங்களில் பலன் தரும். அதாவது, பா.ஜ.க.வுக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுதம் தரித்த தொண்டர் படையும், வாக்குச்சாவடி கமிட்டிக்கு ஆட்களும் கிடைக்கும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைக்கு தவறான அரசியல், பொருளாதார கொள்கை தான் காரணம். அந்த நாட்டில் உற்பத்தி இல்லாமல் போய்விட்டது. இந்தியாவின் பொருளாதாரம் முறையானது. காங்கிரஸ் ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது. அதேநேரம், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய காரணங்களால் நம்முடைய பொருளாதாரத்துக்கு வீழ்ச்சிக்கு வந்துள்ளது. இதன் விளைவுகள் விரைவில் வெளியே வரும்.

இலங்கையில் தமிழர்கள் 2-ம் நிலை மக்களாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை நம்பி தான் இலங்கை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அங்கு தமிழர்களுக்கு உரிமையை வழங்குங்கள் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள், இந்த நேரத்தில் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் சரியான முடிவு எடுத்தால் வெற்றி கிடைக்கும்.

பா.ஜ.க.வின் தந்திரம் பலிக்காது

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவரை விடுவித்து விட்டனர். அதில் எந்த நியாயமும் கிடையாது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களையும் விடுதலை செய்தால், மற்ற கொலை வழக்கு, கொள்ளை, கற்பழிப்பு என்று 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்யுங்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அதோடு, சிறை போலீசாரை போக்குவரத்து துறைக்கும், சிறைகள் எல்லாம் நெல், கோதுமை மூட்டைகளை அடுக்கி வைக்கும் இடமாக மாற்றி விடுங்கள்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சில முன்னெச்சரிக்கை உணர்வுகள் தேவை. இந்த உணர்வு, அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு இருந்தது. அதேநேரம், பன்னீர்செல்வம், பழனிசாமி, சசிகலா ஆகியோருக்கு இல்லாததால் அ.தி.மு.க. 3-ஆக உடைந்திருக்கிறது. இதற்கு பின்னால் பா.ஜ.க. உள்ளது. மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் செயலில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. தென்மாநிலங்களிலும் அந்த கட்சி குறுக்கு சந்து வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் தந்திரம் பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் தலைவர் தங்கபாலு, வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story