உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே கடந்த மே 14-ந்தேதி அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே பா.ஜ.க. சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, முன்னாள் மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செந்தில் அரசன், ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் செல்வம், ஒன்றிய தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துக்கொண்டு பேசினார். இதில் பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பா.ஜ.க.மீது திசை திருப்பும் நோக்கத்துடன் இந்த சம்பவத்தில் சம்பந்தமே இல்லாதவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.