சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம்-236 பேர் கைது


சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம்-236 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2023 3:05 AM IST (Updated: 29 Jun 2023 4:53 PM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 236 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கவர்னர் ஆர்.என்.ரவி

சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக விழாவில் பங்கேற்க அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நேற்று காலை வந்தார். அங்கிருந்து கார் மூலமாக சேலத்திற்கு வந்தார்.

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டப்படும் என்று அறிவித்து இருந்தனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருப்பு கொடி

ஆனால் திட்டமிட்டப்படி பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பூரில் அரசு பொறியியல் கல்லூரி அருகில் நேற்று காலை குவிந்தனர். விழாவில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவி காரில் காலை 11.45 மணிக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, அவர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கவர்னருக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 22 பெண்கள் உள்பட 236 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

எதிர்ப்புகளை தெரிவித்தோம்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கூறுகையில், தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதோடு தமிழக அமைச்சரவை கொள்கைக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இதனால் தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேற வேண்டும் என்பதற்காக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த அவருக்கு கருப்பு கொடியை காட்டி எதிர்ப்புகளை தெரிவித்தோம் என்றனர்.


Next Story