மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் மேகதாது அணைகட்டுவது குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளதை கண்டித்தும், இதற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாய சங்க மாநில செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட துணைச் செயலாளர் ராஜா, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன், ஒன்றிய தலைவர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாரதிமோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பூசாந்திரம் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் ராவணன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கொரடாச்சேரி

தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஆகியவை சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம், துணைச்செயலாளர் மணியன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கருப்பு துணியால் செய்யப்பட்ட பதாகையை கையில் வைத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

குடவாசல்

குடவாசல் பஸ் நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். இதில் மாவட்டச்செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் கெரக்கொரியா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மாதர் சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முத்துப்பேட்டை

இதேபோல் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் தலைவர்கள் யோகநாதன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச்செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பேரளம்

பேரளத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க தலைவர் அல்போன்ஸ் முன்னிலை வகித்தார் இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story