கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு பிளேடு வெட்டு
கோவையில் கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண்ணுக்கு பிளேடு வெட்டு விழுந்தது.
மதுக்கரை
கோவை மதுக்கரை மார்க்கெட்டை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். அதன் பின்னர் இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது கள்ளக்காதலனுடன் வசித்து வந்தார்.சம்பவத்தன்று இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் மதுக்கரை மார்க்கெட் லட்சுமி நகர் சந்திப்பு அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் கணவர் என்னுடன் வாழ விருப்பம் இல்லையா? என்று கேட்டு உள்ளார். அதற்கு இளம்பெண் விருப்பம் இல்லை என்று கூறினார். இதனையடுத்து அவர் வாழ விருப்பம் இல்லை என்றால் எழுதி கொடுத்து விட்டு செல் என்று மனைவியிடம் கூறினார்.
இளம்பெண் எழுதி கொடுத்து விட்டு அங்கு இருந்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் கணவர் தான் கையில் மறைத்து வைத்து இருந்த பிளேடால் இளம்பெண்ணின் கன்னத்தில் வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். வலியில் துடித்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.