அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பு
கரூர் காந்திகிராமம் அருகே தமிழ்நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இதில் 96 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களாக செப்டிக் டேங்க் கழிவு நீர் குடியிருப்புக்கு அருகிலேயே வெளியேறி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்நிலையில் கழிவுநீரை உடனடியாக அகற்றி தரக்கோரியும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக்கோரியும் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கரூர்-திருச்சி சாலையில் குப்பை தொட்டியுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மீண்டும் போராட்டத்தில்...
இதுகுறித்து குடியிருப்பை சேர்ந்த மக்கள் கூறுகையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 96 வீடுகள் உள்ளது. எங்களுக்கு அடிப்படை தேவைகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, வசதிகள் செய்து கொடுப்பதாக கூறினார். ஆனால் எதுவும் செய்யவில்லை. சாக்கடை வசதி இல்லை, குடிநீர் இல்லை, சாக்கடை நிரம்பி வழிகிறது. செப்டிக் டேங்க் நிரம்பி குளம் போல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்களுக்கு வேறுவழியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம். அப்போது போலீசார் சமாதானம் செய்து, அதிகாரிகளை வரவழைத்து எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுப்பதாக கூறினர். எங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்காதபட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.