சாலையில் நடக்கக்கூடாது எனக்கூறி வீட்டு வாசல் ஓலை வைத்து அடைப்பு; குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண் பரபரப்பு புகார்
சாலையில் நடக்கக்கூடாது என்று கூறி வீட்டின் வாசலை ஓலையை வைத்து அடைத்துள்ளதாக தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் புகார் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் நடக்கக்கூடாது என்று கூறி வீட்டின் வாசலை ஓலையை வைத்து அடைத்துள்ளதாக தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெண் புகார் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷேக், கலால் உதவி ஆணையர் ராஜ மனோகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட 527 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
வீட்டு வாசல் அடைப்பு
தென்காசி கீழப்பாறையடி தெருவை சேர்ந்த முருகையா மனைவி பேச்சியம்மாள் என்பவர் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
நான் குடும்பத்துடன் குடியிருந்து வரும் வீட்டு வாசல் முன்பு தென்காசி நகராட்சிக்கு சொந்தமான சிமெண்டு சாலை உள்ளது. இந்த சாலையில் நாங்கள் நடக்கக்கூடாது என்று கூறி அதிலுள்ள வாறுகாலில் சிலர் சவுக்கு கம்பு வைத்து தென்னை ஓலையில் 20 அடி நீளத்தில் எனது வீட்டு வாசலை மறித்து அடைத்துள்ளார்கள். நாங்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவிலும், தண்ணீர் குடம் கூட சுமந்து செல்ல முடியாத அளவிலும் எங்களை சுதந்திரமாக வாழ விடாமல் வீட்டிற்குள் சிறை வைத்துள்ளனர். இதனால் நான் வாழ்வதற்கு வழி இல்லாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சுமார் 3 மாதமாக இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் சுதந்திரமாக வாழ அடைக்கப்பட்டுள்ள ஓலை தட்டியை அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுவால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பயணிகள் நிழற்கூடம் பிரச்சினை
குணராமநல்லூர் பஞ்சாயத்து ராமலிங்கபுரம் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், "மேல மெஞ்ஞானபுரம் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதனை மாற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என ஒரு பிரிவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் பஸ்கள் இந்த நிழற்கூடம் முன்பு நிற்காமல் 500 அடி தூரத்தில் தள்ளி நிற்கின்றன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ்சின் பின்னால் ஓட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த நிழற்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றாமல் இருக்கவும், இங்குள்ள பிரச்சினைகளில் இருந்து ராமலிங்கபுரம் கிராம மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
தமிழ்புலிகள்
தமிழ் புலிகள் கட்சி சார்பில் கீழப்பாவூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் வள்ளுவன் கொடுத்துள்ள மனுவில், "கல்லூத்து அருந்ததியர் கிராமத்தில் சுகாதார வளாகம், கழிப்பிட வசதிகள், தெருவிளக்குகள், தடுப்புச் சுவர், சாலை வசதிகள், சுடுகாட்டில் அமரும் கூடம், விளையாட்டு மைதானம் ஆகியன அமைத்து தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
முள்ளிகுளத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் உமா மகேஸ்வரி என்பவர் கொடுத்துள்ள மனுவில், முள்ளிக்குளம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டதால் தங்களது குடும்பத்தினரை தொந்தரவு செய்வதாக கூறப்பட்டுள்ளது.
தோரணமலை முருகன் பக்தர்கள் குழு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில், "பாவூர்சத்திரத்தில் இருந்து தோரண மலைக்கு ஏற்கனவே இயங்கி வந்து நிறுத்தப்பட்ட மினி பஸ் சேவையை மீண்டும் தொடர வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.