சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர்
மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி திருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பாக தொழில்துறையினர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி
தொழில் நிறுவனங்களில் மின்சார நிலைக்கட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டணம் உயர்வு, சூரியஒளி சக்தி மின் உற்பத்திக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்துறையினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் அனைத்து தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் அனைத்து தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பூரில் உள்ள ஜவுளித்துறை, கிரில் ஒர்க்கர்ஸ், கிரசர் உள்ளிட்ட 36 அமைப்பினர் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.
கலெக்டரிடம் மனு
பின்னர் தொழில் அமைப்பினர் கருப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர். தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களான நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமையில் தொழில் அமைப்பினர், நிர்வாகிகள் ஊர்வலமாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவர்களின் மனுக்களை பெற்ற கலெக்டர், இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் என்றார்.
பின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, முத்துரத்தினம், ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறும்போது, 'தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பலகட்ட போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசியதில் ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கலெக்டரிடம் மனு கொடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வால் 30 சதவீத தொழில் நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகிறது.
வாபஸ் பெற வேண்டும்
இதே நிலை நீடித்தால் திருப்பூரை விட்டு தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் அபாயம் உள்ளது. எனவே மின்கட்டண உயர்வை வாபஸ் பெற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை காப்பாற்ற வேண்டும். அடுத்த கட்டமாக வருகிற 16-ந் தேதி சென்னையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திரளானவர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். தமிழக அளவில் தொழில்துறையினர்பங்கேற்க உள்ளனர்' என்றார்.