16 ஆயிரம் செடிகளில் பூத்துக்குலுங்கும் பல வண்ண ரோஜாக்கள்


16 ஆயிரம் செடிகளில் பூத்துக்குலுங்கும் பல வண்ண ரோஜாக்கள்
x

சுற்றுலா பயணிகளின் வருகையால் கொடைக்கானல் களை கட்டி வருகிறது. அங்குள்ள ரோஜா பூங்காவில், 16 ஆயிரம் செடிகளில் பல வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

திண்டுக்கல்

ரோஜா பூங்கா

சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனை அனுபவிக்க, அன்றாடம் குவியும் சுற்றுலா பயணிகளால் கொடைக்கானல் களை கட்டி வருகிறது.

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைப்பதில் அங்குள்ள ரோஜா பூங்கா முக்கிய பங்கு வகிக்கிறது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் இந்த பூங்கா அமைந்துள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய ரோஜா பூங்கா என்ற பெருமை இதனை சாரும்.

10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, தோட்டக்கலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சன் கோல்டு, சம்மர் டிரீம், பிரின்சஸ், பெர்ப்யூம், டிலைட், ஈபிள் டவர், கிலோட் கிஸ் அப் பையர் உள்பட 1,500 வகையான ரோஜா செடிகள் உள்ளன.

16 ஆயிரம் செடிகள்

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் சுமார் 16 ஆயிரம் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த செடிகளில் கண்களை கவரும் வகையில் பல்வேறு வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

இந்த பூக்கள், சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கிறது என்றால் அது மிகையல்ல. நடந்து சென்றும், பேட்டரி கார்களில் பயணித்தும் சுற்றுலா பயணிகள் பூக்களை ரசிக்கின்றனர். புன்னகை சிந்தும் பூக்கள் கண்களுக்கு மட்டுமின்றி மனதுக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

பூக்களை பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி, புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். கடந்த மாதம் முதல் நேற்று வரை சுமார் 1¼ லட்சம் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story