குருசடைதீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்


குருசடைதீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தம்
x

பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் குருசடை தீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் குருசடை தீவு பகுதிக்கு சுற்றுலா படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

பருவமழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பரவலாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

இதனிடையே தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் நேற்று முதல் பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இருந்து குருசடைதீவுக்கு வனத்துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கடல் சீற்றம் மற்றும் காற்று காரணமாக சுற்றுலா படகு போக்குவரத்து தீவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் நேற்று அங்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வெறிச்சோடியது

இதனால் குந்துகால் கடற்கரையில் உள்ள சுற்றுலா படகு சவாரி தளமும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதுபோல் பாதுகாப்பு கருதி வனத்துறையின் சுற்றுலா படகுகள் அனைத்தும் குருசடைதீவு கரையில் ஏற்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

காற்றின்வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் வழக்கம்போல் குருசடை தீவுக்கு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story