புதர் மண்டி கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம்


புதர் மண்டி கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம்
x
தினத்தந்தி 26 Jun 2023 4:48 PM GMT (Updated: 27 Jun 2023 8:55 AM GMT)

மடத்துக்குளத்தில் புதர் மண்டிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர்

பொருளீட்டு கடன்

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உதவுவதில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பங்கு பெருமளவு உள்ளது.மடத்துக்குளத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் விவசாயிகள் விளைபொருட்களை உலர வைக்க உலர்களங்கள், இருப்பு வைக்க சேமிப்புக் கிடங்குகள் ஆகியவை அமைந்துள்ளது.இதன்மூலம் விளைபொருட்களை உலர வைத்து, உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வகையில் இருப்பு வைக்க முடியும்.அத்துடன் இருப்பு வைக்கும் பொருட்களுக்கு பொருளீட்டுக் கடன் பெறவும் வசதி உள்ளது.தேசிய வேளாண் சந்தை மூலம் இந்தியா முழுவதும் உள்ள வியாபாரிகளிடம் தங்கள் விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் வாய்ப்பும் இங்கு உள்ளது.மேலும் இதே வளாகத்தில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலகங்கள் மற்றும் நெல் கொள்முதல் மையம் ஆகியவை செயல்படுகின்றன.இதனால் தினசரி ஏராளமான விவசாயிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

மாதிரி பண்ணை

இந்தநிலையில் இந்த வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத இடங்களில் புதர் மண்டிக் கிடக்கிறது.அந்த புதர்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.இதனால் விவசாயிகள் அச்சமடையும் நிலை உள்ளது.எனவே பயன்பாட்டில் இல்லாத இடங்களை சுத்தம் செய்து பண்படுத்தி வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் மாதிரி பண்ணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதன்மூலம் விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மாதிரி பண்ணை மூலம் விவசாயிகளுக்கான செயல்முறை விளக்கங்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கவும் முடியும்.


Next Story