அட்டை பெட்டியில் ஆண் சிசு பிணம்


அட்டை பெட்டியில் ஆண் சிசு பிணம்
x
சேலம்

கன்னங்குறிச்சி:-

சேலம் செட்டிசாவடியில் அட்டை பெட்டியில் ஆண் சிசு பிணம் கிடந்தது. அந்த சிசுவை குப்பை மேட்டில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அட்டை பெட்டியில்...

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் செட்டிசாவடியில் உள்ள குப்பை மேடு பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் இங்கு ஏராளமானோர் குப்பை பொறுக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் அவர்கள் பொறுக்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு கிடந்த அட்டை பெட்டியை குப்பை பொறுக்குபவர் எடுத்து பிரித்து பார்த்தார். அதில், பிறந்து சில நாட்களே ஆன ஆண் சிசு பிணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசீலன், மோனிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சிசுவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குப்பை மேட்டில் பிறந்து சில நாட்களான ஆன ஆண் சிசுவின் பிணத்தை வீசிச்சென்ற கல் நெஞ்சக்காரர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை அதன் தாயே கொன்று அட்டைபெட்டியில் வைத்து சிசுவின் பிணத்தை குப்பை மேட்டில் வீசி சென்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். அல்லது வேறு யாரேனும் இந்த சிசுவை வீசி சென்றார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குப்பை மேட்டில் கிடந்த அட்டை பெட்டியில் ஆண் சிசு பிணம் கிடந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story