கருப்பூர் அருகே கிணற்றில் வாலிபர் உடல் மீட்பு-கொலையா? போலீசார் விசாரணை


கருப்பூர் அருகே கிணற்றில் வாலிபர் உடல் மீட்பு-கொலையா? போலீசார் விசாரணை
x

கருப்பூர் அருகே கிணற்றில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

கருப்பூர்:

சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி பாம்பன் கரடு பகுதி சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் மேகராஜ் (வயது 24). இவர் தனது சித்தப்பாவின் மாங்காய் மண்டியில் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மேகராஜை காணவில்லை என கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சந்திரன் புகார் அளித்தார். இதையடுத்து மேகராஜின் தாயார் ராசாத்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மேகராஜ் தனது நண்பர் குமரேசன் என்பவருடன் வெளியில் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பவில்லை என கூறினார். எனினும் மேகராஜின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கருப்பூர் அருகே ஓரத்தி பண்ணை பகுதியில் உள்ள கிணற்றில் பகுதியில் மேகராஜின் செருப்பு கிடந்ததை உறவினர்கள் பார்த்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை முதல் கிணற்றில் தேட தொடங்கினர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை மீண்டும் தேடும் பணி தொடர்ந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் இருந்து மேகராஜின் உடலை மீட்டனர். இதுகுறித்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் ேமகராஜ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு உடல் கிணற்றில் வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story