தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஊழியர் பலி


தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஊழியர் பலி
x

தொழிற்சாலையில் பாய்லர் எந்திரம் வெடித்து விபத்தான சம்பவத்தில் 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஊழியர் ஒருவர் பலியானார்.

காஞ்சிபுரம்

பாய்லர் எந்திரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வாகங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில ஊழியர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 21-ந் தேதி நள்ளிரவில் தொழிற்சாலையில் இருந்த பாய்லர் எந்திரம் திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்து எறிந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

ஊழியர் பலி

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களான காட்ரம்பாக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த மதன்குமார் (வயது 26), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் (19), புத்தாராய் (26), ரஞ்சித் (26), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்த சேனாதிபதி (36) ஆகிய 5 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் ஏற்பட்டவர்களை தீயணைப்புத் துறை மற்றும் சோமங்கலம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்த சேனாதிபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். மற்ற 4 பேரும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story