ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து; 5 பேர் படுகாயம்


ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து; 5 பேர் படுகாயம்
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் கார், மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுக்கு பெயிண்டு பூசும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில ஊழியர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என 80-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பாய்லர் திடீரென வெடித்து தொழிற்சாலையின் உள்ளே தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

பாய்லர் வெடித்த சத்தம் கேட்டு உள்ளே இருந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். பாய்லர் வெடித்தபோது அந்த பகுதியில் இருந்த ஊழியர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து இருங்காட்டுகோட்டை தீயணைப்பு துறையினருக்கும் சோமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் தீயணைப்பு வீரர்கள், சோமங்கலம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் படுகாயம் அடைந்தவர்கள் காட்ரம்பாக்கம் பள்ளி கூட தெருவை சேர்ந்த மதன்குமார் (வயது 26), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் (19), புத்தாராய் (26), ரஞ்சித் (26), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்த சேனாதிபதி (36) என்பது தெரியவந்தது. அவர்கள் காட்ரம்பாக்கம் பகுதியில் தங்கி இருந்து இந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மராட்டிய மாநிலம் பூனே பகுதியை சேர்ந்த தொழிற்சாலை அதிகாரி துசார் (39), பீகார் மாநிலத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் லட்சுமன் (27), ஸ்ரீபெரும்புதூர் மன்னூர் பகுதியை சேர்ந்த சுமன்ராஜ் (34), மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தொழிற்சாலை ஊழியரான ராம்பிரசாத் (27) ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story