பாய்லர் ஆலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்
பாய்லர் ஆலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
திருவெறும்பூர்,ஜூன்.29-
திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை வளாகத்தில் ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் மொழியைப் புறக்கணித்து நமஸ்தே நமஸ்காரம் என்று இந்தியில் சொல்ல மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக கூறியும், அதனை கண்டித்தும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் கபிலன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ராஜ்குமார், தி.க. ஒன்றிய தலைவர் மாரியப்பன், தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகி இலக்குவன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பானது. பின்னர் போராட்டகாரர்கள் அங்குள்ளசாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இப்பிரச்சினை குறித்து வருகிற 30-ந் தேதி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.