கிருபாபுரீஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு சோதனை


கிருபாபுரீஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு சோதனை
x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே கோவையில் 3 கோவில்களை தகர்க்க திட்டம் தீட்டி ஒத்திகையின் போது கார் வெடிப்பு சம்பவம் நடந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் வெடிகுண்டு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மோப்பநாய் ராணி, உதவியுடன் திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

பஸ் நிறுத்தத்தில் சோதனை

இதில் கோவில் உள் மற்றும் வெளி பிரகாரம், உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடம் உள்பட கோவில் முழுவதும் அங்குலம், அங்குலமாக மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவில் முன்புள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் விழுப்புரம் பஸ்நிலையம்,ரெயில் நிலையம், திருவெண்ணெய்நல்லூர் பஸ்நிறுத்தம், அரசூர் கூட்டுரோடு உள்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் சோதனை நடத்தினர்.


Next Story