வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை


வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Aug 2023 8:30 PM GMT (Updated: 13 Aug 2023 8:30 PM GMT)

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

கோயம்புத்தூர்

கோவை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கோவை ரெயில் நிலையத்தில் நேற்று காலை வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் கோவை ரெயில் நிலை நுழைவு வாயில் பகுதி வளாகத்தில் மர்ம பை ஒன்று கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டருடன் வந்தனர். மேலும் தீயணைப்பு துறை வீரர்களும் வாகனத்தில் விரைந்து வந்தனர்.

ஒத்திகை

தொடர்ந்து அந்த மர்ம பையில் இருந்த வெடிகுண்டை பாதுகாப்பு உடை அணிந்த வெடிகுண்டு நிபுணர் ஒருவர் எடுத்து செயலிழக்க செய்தார். இந்த வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகையை முன்னிட்டு சிறிது நேரம் கோவை ரெயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் கலந்தது கொண்டனர்.

தொடர்ந்து ரெயில்வே போலீசார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ரெயில் நிலைய நடைமேடைகள், பயணிகளின் உடமைகள், பார்சல்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரெயில் நிலைய பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்களை கண்காணித்தனர்.

விமான நிலையம்

இது தவிர சுதந்திர தின விழாவையொட்டி கோவை விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமானநிலையத்திற்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பார்சல்களும் சோதனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில் மாவட்ட மற்றும் மாநகர் எல்லைகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஓட்டல்கள், விடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு தங்கியுள்ளவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், பஸ் நிலையங்கள், கடைவீதிகள் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணி மேற்கொள்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களையும் கண்காணித்து வருகின்றனர்.


Next Story