சேலம் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு


சேலம் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 13 Aug 2023 7:30 PM GMT (Updated: 13 Aug 2023 7:31 PM GMT)
சேலம்

சூரமங்கலம்:-

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சேலம் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர்..

பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாட்டின் 76-வது சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முக்கிய ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி சேலம் மாவட்டத்திலும் சுதந்திர தினவிழா பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய ரெயில் நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில்வே பாலப்பகுதி, தண்டவாள ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ரெயிலில் சோதனை

இந்நிலையில், நேற்று காலை முதல் சேலம் வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் போலீசார் மோப்ப நாய் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில்களில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோப்ப நாய் பவானி மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அதாவது, பயணிகளின் உடமைகளில் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா? என்றும், நடைமேடை பகுதிகள், பார்சல் அலுவலகம், கார் பார்க்கிங் ஏரியா, தண்டவாள பகுதிகளில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு சோதனை நடத்தினர். அதேபோல், சேலம் வழியாக சென்ற திருவனந்தபுரம்- டெல்லி செல்லும் கேரள எக்ஸ்பிரஸ், மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றி திரிகிறார்களா என்றும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Next Story