நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: கடலூா் மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது வழக்கம்.
சமீபத்தில் கோவை கார் வெடிப்பு, பெங்களூருவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவங்கள் நடைபெற்றதால், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
வெடிகுண்டு சோதனை
இரவு நேர ரோந்துப்பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தங்கும் விடுதிகள், வழிபாட்டு தலங்கள், பஸ், ரெயில் நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே அனுமதித்து வருகின்றனர்.
முக்கிய இடங்களில் மோப்ப நாய்கள் மூலமாகவும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். கடலூரில் மோப்ப நாய் லியோ மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. கடலூர் ஆல்பேட்டை முதல் வல்லம்படுகை வரையுள்ள சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
1,500 போலீசார்
தற்போது கூடுதலாக 20 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்தும் போலீசார் சோதனை நடத்துகின்றனர். வழிபாட்டு தலங்கள், முக்கிய இடங்கள் என 237 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை மற்றும் பாதுகாப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை தொடரும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார்.