திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.
ரெயில்வே பாதுகாப்பு படை
மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில், வெடிகுண்டுகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் 4 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தனிப்படையினர் சோதனை நடத்த வசதியாக வெற்றி எனும் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர், வெடிகுண்டுகளை அப்புறப்படுத்த உதவும் கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து மதுரை கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் சுழற்சி முறையில் சோதனை நடத்தும்படி மதுரை கோட்ட கமிஷனர் அன்பரசு உத்தரவிட்டார். அதன்படி அந்த தனிப்படையினர் ஒவ்வொரு ரெயில் நிலையமாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று அந்த தனிப்படையினர் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
மோப்பநாய் சோதனை
பின்னர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகள், தண்டவாளம், குட்ஷெட் பகுதி, பார்சல் பிரிவு, நடைமேடை பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை மோப்பநாய் மூலம் சோதனை செய்தனர். இதேபோல் ரெயில் நிலையத்தின் வெளியே உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடம், கார் மற்றும் வேன் நிறுத்துமிடங்களில் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு, வெடிபொருட்கள் இருக்கிறதா? என்று சோதனையிட்டனர்.
இதுதவிர ரெயில்நிலையத்தில் நின்று சென்ற ரெயில்கள், ரெயில் பயணிகளின் பைகளையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கிடையே ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டதால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.