திருச்சியில் கேட்பாரற்று நின்ற கார்களில் வெடிகுண்டு சோதனை


திருச்சியில் கேட்பாரற்று நின்ற கார்களில் வெடிகுண்டு சோதனை
x

திருச்சியில் கேட்பாரற்று நின்ற கார்களில் வெடிகுண்டு சோதனை நடந்தது.

திருச்சி

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமேசாமுபின் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. முபினின் வீட்டிலும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து கோவை கார் வெடிப்பு சம்பவமானது பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்று தெரியவரவே, முபின் கூட்டாளிகள் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை செய்து வருகிறது.

டி.ஜி.பி. உத்தரவு

இதற்கிடையே கோவையின் பல பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 7 கார்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த கார்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதேநேரம் கோவையை போல் தமிழகத்தில் பிற பகுதிகளிலும் ஏதேனும் நாசவேலையில் ஈடுபட திட்டம் தீட்டி இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், திருச்சி மாநகரம் முழுவதும், அனைத்து சரக உதவி போலீஸ் கமிஷனர்கள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பாலக்கரையில் இருந்து மரக்கடை செல்லும் பழைய மதுரை சாலையின் ஓரத்தில் ஏராளமான கார்கள், மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரின்றி பலமாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கார்கள் பறிமுதல்

இதையடுத்து திருச்சி உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று மதியம் அங்கு விரைந்து சென்று சாலையோரம் கேட்பாரின்றி நின்ற அனைத்து கார்களையும், அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு கண்டறியும் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

போலீசார் சோதனை செய்வதை பார்த்ததும் சில கார்களின் உரிமையாளர்கள் விரைந்து வந்து தங்கள் கார்தான் என்று ஆவணங்களை காண்பித்து, வீடு அருகில் உள்ளதால் இங்கு நிறுத்தி இருப்பதாக கூறி காரை ஓட்டிச்சென்றனர். அதேநேரம் யாரும் உரிமை கொண்டாடாத 9 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உரிமையாளர்களை தேடி வருகின்றனர்

அதேபோல் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார், அய்யப்பன் கோவில் அருகில் கேட்பாரின்றி நின்ற கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கார்களின் உரிமையாளர்களை போலீசார் தேடி வருகிறார்கள். போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் திருச்சி மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் சிலிண்டர் வெடித்த கார், 10 பேரின் கைகள் மாறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story