இ-மெயில் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை விமான நிலையத்துக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இ-மெயில் முகவரிக்கு நேற்று மாலை மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பி இருந்தார். அதில், "பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் நபர் ஒருவர் விமானத்தில் செல்ல உள்ளார். அப்போது விமானம் வெடித்து சிதறும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை கண்டதும் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதில் எத்தனை மணிக்கு? உள்நாட்டு விமான நிலையமா?, பன்னாட்டு விமான நிலையமா? என்று எந்த தகவலும் இல்லை. மேலும் போலியாக இ-மெயில் ஐ.டி.யை உருவாக்கி அதில் இருந்து அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், பயங்கரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசாா், தமிழக உயா் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் கொடுத்தனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையக அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் உயா் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் விமான நிலையத்துக்கு வந்த மெயிலில் சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. பொதுவாக விமானத்தில் குண்டு வெடிக்கும் என மட்டும் குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு ஆய்வு செய்ததில் வெளிநாடு செல்லும் பயணி ஒருவரை தடுத்து நிறுத்துவதற்காக வந்த மெயிலாக இருக்கலாம் என்று தெரிய வந்தது.
எனினும் சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் பயணிக்க வரும் பயணிகள், காா் பாா்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடக்கும். வெடிகுண்டு மிரட்டலையடுத்து தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா். இ-மெயிலில் மிரட்டல் வந்ததால் சைபா் கிரைம் பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனா்.