முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது மறுமுனையில் இருந்து பேசிய நபர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது தான் இதற்கு காரணம். அந்த வெடிகுண்டு இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கும் என கூறி விட்டு அந்த நபர் செல்போனை துண்டித்துள்ளார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டுகளை கண்டறியும் வெடிகுண்டு நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் செல்போனில் பேசியது யார்? என்று போலீசார் காலர் ஐ.டி. மூலம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த நபரிடமிருந்து வந்தது தெரியவந்தது.

கட்டிட தொழிலாளி சிக்கினார்

உடனே சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் குமரி மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான தனிப்படையினர் பூதப்பாண்டி பகுதியில் இருந்து மிரட்டல் விடுத்தவர் யார்? என விசாரணை நடத்தினர். இதில் பூதப்பாண்டி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள உச்சம்பாறை பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (வயது 30) என்ற கட்டிட தொழிலாளி என்பது தெரிய வந்தது.

பின்னர் நேற்று அதிகாலையில் அவருடைய வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இசக்கிமுத்துவை பிடித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மதுபோதையில்...

விசாரணையில், இசக்கிமுத்து பெற்றோர் மற்றும் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை (26-1-2023, 20-2-2023) சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பூதப்பாண்டி கோவில் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று மிரட்டியதும், போலீசார் அவரை எச்சரித்து அனுப்பியதும் தெரியவந்தது. இந்தநிலையில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு கோவில் விழாவில் ஒலிபெருக்கி மூலம் பாடல்களை அதிக சத்தமாக ஒலிபரப்பு செய்ததாகவும், அந்த சத்தத்தை குறைக்கச் சொல்லியும் கோவில் நிர்வாகிகள் கேட்காததால் மதுபோதையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார்.

இதை தொடர்ந்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் இசக்கிமுத்து மீது 505 (1 பி) (மக்களுக்கு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்ட குற்றம்), 507 (மறைமுகமாக மிரட்டுதல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை, குமரி போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story