தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தை சேர்ந்தவரிடம் விசாரணை


தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சேலத்தை சேர்ந்தவரிடம் விசாரணை
x

தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், தாம்பரம் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள், உடனடியாக தாம்பரம் ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதையடுத்து ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் மோப்ப நாய் 'ரூபா' மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று தாம்பரம் ரெயில் நிலையம் முழுவதும் உள்ள அனைத்து நடைமேடைகள், ரெயில்கள் மற்றும் பொதுமக்களிடம் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதன்பிறகே ரெயில்வே போலீசார் நிம்மதி அடைந்தனர். இதனால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகவும், அ.தி.மு.க. ஒற்றை தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என்பதற்காகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

2019-ம் ஆண்டு தாம்பரம் அடுத்த சேலையூர், பராசக்தி நகர் பகுதியில் வசித்து வந்த வினோத்குமார், ஜூலை மாதம் 28-ந் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் இதேபோல மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து, 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story