திருப்பூர் வரலாறு நூல் வெளியீட்டு விழா
திருப்பூர் தேவாங்கர் சமூக திருமண மண்டபத்தில், கவிஞர் சிவதாசன் எழுதிய திருப்பூர் வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. செல்வராஜ் தலைமை தாங்கினார். வெங்கடேஷ், பழனிச்சாமி, நாகராஜ் முன்னிலை வகித்தனர். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர்கள் குமார், செழியன், புஷ்பலதா தங்கவேலன் ஆகியோர் பங்கேற்றனர்.
மகாபாரதத்தில் கவுரவர்கள் கவர்ந்து வந்த மாடுகளை அர்ச்சுணன் தடுத்து நிறுத்தி போர் செய்து திரும்பியதால் திருப்பூர் என்றும், அர்ச்சுணன் செய்த போர் திருப்போர் என்றும், அது மறுவி திருப்பூர் ஆனது என்றும், திருப்பூரின் வரலாறு குறித்து நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் கோவில்களின் சிறப்புகள், நொய்யல் நதிக்கரை நாகரிகம் குறித்தும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டார். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் பேரன் உதய் ஆஷர், சுதன், ஜீவநதிநொய்யல் சங்க நிறுவனர் அகில் ரத்தினசாமி, சுகுமாரன் பங்கேற்றனர். கோவை ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் வதம்பை மணியன், நடவு பதிப்பக நூலகர் முத்துபாரதி ஆகியோர் நூல் அறிமுகம் குறித்து பேசினார்கள். சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியம், சுந்தரபாண்டியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நூலாசிரியர் கவிஞர் சிவதாசன் ஏற்புரையாற்றினார். இதில் திருமண தகவல் மைய பொருளாளர் மோகன்ராஜ், அருண்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.