மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் இறுதிக்குள் புத்தகப்பை வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் இறுதிக்குள் புத்தகப்பை வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் தலைமையில் எங்கெல்லாம் விலையில்லா சைக்கிள் வந்து இருக்கிறதோ அங்கெல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் விலையில்லா காலணிகள் வழங்கப்படும். விலையில்லா புத்தகப் பைகள் டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்குவதில் 13 முதல் 15 மாதங்கள் கால தாமதமாகியது.
தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு 6 மாதங்களுக்குள் விலையில்லா பொருட்களை வழங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம். அடுத்த ஆண்டு முதல் பள்ளிகள் திறந்தவுடன் ஜூன் மாத இறுதிக்குள் விலையில்லா பொருட்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று இனிமேல் தாமதமாகாமல் பார்த்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.