கோவை கொடிசியாவில் புத்தக கண்காட்சி
கோவை கொடிசியாவில் புத்தக கண்காட்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்கிறார்.
கோவை
கோவை கொடிசியாவில் புத்தக கண்காட்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்கிறார்.
புத்தக கண்காட்சி
கோவை கொடிசியாவில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-ம் ஆண்டு புத்தக கண்காட்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இந்த புத்தக கண்காட்சி குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு மற்றும் கொடிசியா இணைந்து 7-ம் ஆண்டு புத்தக கண்காட்சியை கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த புத்தக கண்காட்சியில் 333 அரங்குகள் அமைக்கப்படும். நாடு முழுவதும் இருந்து பல்வேறு தலைப்புகளில் லட்சகணக்கான புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சியில் 280 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை அப்போது 1 லட்சம் பேர் கண்டு ரசித்து சென்றனர். மேலும் ரூ.6 கோடி புத்தகங்கள் விற்பனையாகியது. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் புத்தக கண்காட்சிக்கு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.
அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த புத்தக கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்கிறார். விழாவிற்கு அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். புத்தக கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். புத்தக கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புத்தக கண்காட்சி தலைவர் ரமேஷ் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவையை சேர்ந்த கவிஞர் சுகுமாரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
இதுதவிர மொழி பெயர்ப்பு மற்றும் இளம் படைப்பாளர்களுக்கும் விருது வழங்கப்படும். மேலும் நூல் வெளியீட்டு விழா, விவாத மேடை தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப்போட்டி என்பது உள்பட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது கொடிசியா தலைவர் திருஞானம், கவுரவ செயலாளர் சசிக்குமார், இலக்கிய கூடல் தலைவர் பாலசுந்தரம், புத்தக கண்காட்சி துணை தலைவர் ராஜேஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்.