9-ந் தேதி புத்தக திருவிழா தொடக்கம்


9-ந் தேதி புத்தக திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 19 Jan 2023 6:45 PM GMT (Updated: 19 Jan 2023 6:45 PM GMT)

ராமநாதபுரத்தில் வருகிற 9-ந் தேதி முதல் புத்தக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான `லோகோ'வை மற்றும் சின்னத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.

ராமநாதபுரம்

தங்கச்சிமடம்,

ராமநாதபுரத்தில் வருகிற 9-ந் தேதி முதல் புத்தக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான `லோகோ'வை மற்றும் சின்னத்தை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.

புத்தக திருவிழா

ராமநாதபுரத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 5-வது புத்தக திருவிழா மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படுகின்றது. இந்த நிலையில் புத்தக திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு திருவிழாவிற்கான இலச்சினை(லோகோ) மற்றும் சின்னம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று தங்கச்சிமடம் பேய்கரும்பில் அப்துல்கலாம் நினைவிடம் அருகே உள்ள புயல் காப்பக கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி சுதாகர் வரவேற்றார். எழுத்தாளர் சரவணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு புத்தக திருவிழாவிற்கான இலச்சினையாக கலங்கரை விளக்கத்தை வெளியிட்டார். தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடல் பசுவை பாதுகாக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாக கடல் பசுவின் சின்னத்தையும் வெளியிட்டார். தொடர்ந்து அப்துல் கலாம் நினைவிடத்தில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

5 லட்சம் புத்தகங்கள்

இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், பயிற்சி கலெக்டர் நாராயணசாமி ஆகியோர் மாணவ, மாணவிகள் மத்தியில் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு, பரமக்குடி சார்ஆட்சியர் ரசூல், தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற தலைவர் குயின் மேரி, துணை தலைவர் ஆமீனாம்பாள், தாசில்தார்கள் உமா மகேஸ்வரி, அப்துல் ஜபார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், ஊராட்சி எழுத்தர் கதிரேசன், மற்றும் ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்ட நிர்வாகம் சார்பில் 5-வது புத்தக திருவிழாவானது வருகின்ற பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. சுமார் 100 அரங்குகள் அமைக்கப்படவுள்ளதுடன், 5 லட்சம் புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளது. காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை புத்தக கண்காட்சியும், தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், உணவு திருவிழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story