சிவகங்கையில் புத்தக திருவிழா 27-ந் தேதி தொடக்கம்- கலெக்டர் தகவல்
சிவகங்கையில் புத்தக திருவிழா 27-ந் தேதி தொடங்குவதாக கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் பாபாசி அமைப்பு இணைந்து நடத்தும் இரண்டாவது புத்தகத் திருவிழா சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 27-ம் தேதி(நாளை மறுதினம்) தொடங்கி வருகிற பிப்ரவரி 6-ம்தேதி வரை நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவுடன் இலக்கிய திருவிழாவும் இணைந்து நடத்தப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டை விட 10 அரங்கங்கள் கூடுதலாக அமைக்கப்படுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் விற்பனை அரங்கத்துடன் அரசின் சாதனைகள் குறித்த அரங்கங்கள், தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் கீழடி குறித்த அரங்கங்கள், அறிவியல் இயக்கத்தின் மூலம் அமைக்கப்படும் அரங்கங்கள், போக்குவரத்து விதிமுறைகளை விளக்கும் பஸ் ஆகியவை அமைக்கப்படுகிறது. இந்த இலக்கியத் திருவிழா வருகிற 28,29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் குன்றக்குடி அடிகளார் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள் இந்த புத்தக அரங்கம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். திருவிழாவில் 500 பேர் அமர்ந்து புத்தகங்கள் வாசிக்க ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. புத்தக திருவிழாவையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கவும் பஸ் நிலையத்தில் இருந்து புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்திற்கு வந்து செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் குழந்தைகளுக்கான திரைப்படம் கோளரங்கம் போன்றவை அமைக்கப்படும். இந்த ஆண்டு ரூ.4 கோடியிலிருந்து ரூ.5 கோடி வரை புத்தகங்களின் விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20 பள்ளிகளில் மகாத்மா காந்தி நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மூன்று பள்ளிகளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளிலும் வருகிற மார்ச் மாதத்திற்குள் நூலகங்கள் திறக்கப்படும். அடுத்த ஆண்டு மேலும் 20 பள்ளிகளில் நூலகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள 435 பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவா் கூறினாா். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) வீரராகவன், உதவி ஆணையாளர் (கலால்) ரத்தினவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.