புத்தக திருவிழா நிறைவு

நாகையில் நடைபெற்று வந்த புத்தக திருவிழா நிறைவு பெற்றது.
வெளிப்பாளையம்:
நாகை அரசு ஐ.டி.ஐ வளாகத்தில் ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் புத்தக திருவிழா தொடங்கி நடந்தது வந்தது .இந்த விழா நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. நிறைவு விழாவில் பதிப்பாசிரியர்கள், புத்தக திருவிழாவை நடத்திய அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பாக நிகழ்ச்சிகள் நடத்தியவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.இதை தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-நாகை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் புத்தக திருவிழா நடத்த ஆலோசனை நடத்திய போது அலுவலர்கள் நாகை மாவட்டத்தில் புத்தக திருவிழா சாதனை படைக்குமா? என்று கேள்விகளை எழுப்பினர். ஆனால் அனைத்துத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் புத்தக திருவிழா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த புத்தக திருவிழாவில் ரூ.75 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இ்வ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள் சங்க செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






