கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 4:17 AM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகம், புத்தகப்பை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பிரித்து அனுப்பும் பணி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தகபைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் நேற்று கூறியதாவது:- கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள 172 பள்ளிகள், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 109 பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகளில் 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கின்றனர்.

இவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வந்துள்ளன. பள்ளி பாட புத்தகங்களை பொறுத்தவரை கடந்த ஜனவரி முதல் வர தொடங்கி மே முதல் வாரத்தில் முழுவதும் வந்து விட்டன. அவற்றை கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மே 13-ந் தேதி முதல் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.

முதல் நாளிலே...

அதே போல் புத்தகப்பை கடந்த மேல், 30-ந் தேதி 13 ஆயிரமும், இன்று (நேற்று) 10,880 புத்தகப்பைகளும் வந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் மற்ற புத்தகப்பைகளும் வந்துவிடும். அதன் பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகப்பைகள் வாகனங்கள் மூலம் அனுப்பப்படும். அதேபோல மாவட்ட தொடக்கப்பள்ளிகளுக்கு புத்தகங்கள், புத்தகபைகள் அனுப்பும் பணியும் ஓரிரு நாளில் தொடங்கும்.

அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 7-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story