புத்தகங்கள் வாங்கி கொடுத்து வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும்


புத்தகங்கள் வாங்கி கொடுத்து வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும்
x

புத்தகங்கள் வாங்கி கொடுத்து வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும்

திருவாரூர்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்கி கொடுத்து வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும் என்று திருவாரூரில் நடந்த புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் சாருஸ்ரீ பேசினார்.

புத்தக திருவிழா

திருவாரூர் புதிய பஸ் நிலையம் அருகில் புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன், மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கலெக்டர் பேசுகையில், பெரிய தலைவர்கள் புத்தகங்களை வாசிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். புத்தகங்களை வாசிப்பவர்களாக மட்டுமில்லாமல் நேசிப்பவர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள். இன்றைய வாசிப்பாளர்கள் நாளைய தலைவர்கள் என்ற கூற்றுக்கிணங்க இன்றைய இளைய தலைமுறைகளை வாசிப்பாளராக மாற்ற, நாளைய தலைவராக மாற்ற தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது.

பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்

அதன் தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் இன்று முதல் (நேற்று) அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. முன்பெல்லாம் புத்தக கண்காட்சி என்பது சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெறும். புத்தகங்கள் வாங்க வெளியூர் செல்ல வேண்டிய நிலையை மாற்றி இப்போது நமது மாவட்டத்திலேயே புத்தகங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வாசிக்கும் பழக்கம் நம்மிடையே வந்துவிட்டால் அது நமது வாழ்க்கை முழுவதும் தோழானாகவே இருந்து கொண்டிருக்கும். இந்த போட்டி நிறைந்த உலகத்தில் நம்மை உயர்த்தி காட்டுவது நமது அறிவு மட்டும்தான். அந்த அறிவை வாசிப்பு திறனால் மட்டுமே மேம்படுத்த முடியும். பேசுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்.

புத்தகங்களை வாங்குவோம்

யோசிப்பதற்கு முன்பு வாசிக்க வேண்டும். பெற்றோர்கள் நமது குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கி கொடுத்து வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறுவது போல நூலகம் இல்லா வீடு முழுமை அடையாது. அதுபோல் புத்தகங்களை வாங்குவோம் வாசிப்போம், நமது வாழ்க்கையை முழுமையடைய செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தணாமணி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story