'புத்தகங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக உள்ளது'

‘புத்தகங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள உதவியாக உள்ளது’ என நாகையில் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த கலெக்டர் அருண் தம்புராஜ் கூறினார்.
புத்தக திருவிழா
நாகை அரசினர் ஐ.டி.ஐ. வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்னையாளர், பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா தொடங்கியது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
தமிழக மீன்வளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா வரவேற்றார்.
விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியதாவது:-
அனைத்து புத்தகங்கள்
இந்த புத்தக திருவிழா அடுத்த மாதம்(ஜூலை) 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து 110 பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து வகையான புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
தினந்தோறும் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் தமிழ் அறிஞர்களின் கருத்தரங்குகளும், சிந்தனையரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
நல்ல நண்பனாக...
இந்த புத்தக திருவிழாவானது மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களிடயே சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படுகிறது. ஒரு புத்தகமானது மனிதனுடைய வாழ்வியலை தெரிவிக்கும் விதமாக உள்ளது. புத்தகங்கள் நம் வாழ்வில் நாம் முன்னேறி செல்வதற்கும், நம் வாழ்க்கையை சிந்தனையும், அறிவையும் வளர்த்து கொள்வதற்கு உதவியாக மட்டும் அல்லாமல் நமக்கு ஒரு நண்பனாகவும் விளங்குகிறது.
புத்தகங்களின் மீது அன்பு வர வேண்டும். படித்துக்கொண்டே இருக்க வேண்டும். புத்தக கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்க தலைவர் வைரவன், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.






