வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் 30 வாக்குச்சாவடிகள் குறித்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் 30 வாக்குச்சாவடிகள் குறித்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் காலியிடங்களை நிரப்ப இடைத்தேர்தல்கள் நடத்துவது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மதியம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை ராஜினாமா, இறப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஊரக உள்ளாட்சி பதவிகளில் காலியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1 கிராம ஊராட்சி தலைவர், 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
30 வாக்குச்சாவடிகள்
அதன்படி அவினாசி ஒன்றியத்தில் 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 11 வாக்குச்சாவடிகள் உள்ளன. பல்லடம் ஒன்றியத்தில் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 11 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதுபோல் ஊத்துக்குளி ஒன்றியத்தில் இச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அவினாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர், குடிமங்கலம் ஒன்றியம், குடிமங்கலம் 1-வது வார்டு உறுப்பினர், காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர், பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், உடுமலை ஒன்றியம் அந்தியூர் ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா 1 வாக்குச்சாவடி என மொத்தம் 30 வாக்குச்சாவடிகள் உள்ளன.
கருத்துகளை தெரிவிக்கலாம்
ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள், மறுப்புகள் மற்றும் கோரிக்கைகள் இருந்தால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.