அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
நாமகிரிப்பேட்டையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராசிபுரம்
ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஈ.கே.பொன்னுசாமி தலைமை தாங்கினார். ஜெகநாதன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் தி.மு.க. ஆட்சியில் திறந்து வைக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய திட்டம் எதுவும் கொண்டு வரவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும். எனவே வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களையும், வெளியூரில் இருப்பவர்களின் பெயர்களை நீக்கவும், புதிதாக வாக்காளர்களை சேர்க்கவும் பூத் கமிட்டி நிர்வாகிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ராசிபுரம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் தாமோதரன், வேம்புசேகரன், ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், வெண்ணந்தூர் ஒன்றிய குழு தலைவர் தங்கம்மாள் பிரகாசம், முன்னாள் சேர்மன் சரோஜினி, அரவிந்தன், ராசிபுரம் கோபால் உள்பட ஒன்றிய, கிளை, சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.