ஆயுத பூஜையையொட்டி பொரி உற்பத்தி
மடத்துக்குளம் அருகே ஆயுத பூஜையையொட்டி பொரி உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே ஆயுத பூஜையையொட்டி பொரி உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாரம்பரிய தொழில்
ஆயுத பூஜை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது பொரி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அமோக விற்பனையை எதிர்நோக்கி இரவு பகலாக பொரி உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெறும். ஆனால் ஆண்டுக்கு ஆண்டு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்து வரும் நிலையில் பொரி விற்பனை குறைந்து வருவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மடத்துக்குளத்தையடுத்த கொழுமம் பகுதியில் பொரி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் கோபால் என்பவர் கூறியதாவது:-
தந்தை செய்த பாரம்பரிய தொழிலை விட்டு விட வேண்டாம் என்பதற்காக தொடர்ந்து செய்து வருகிறோம். ஆரம்ப காலங்களில் நெல்லை வாங்கி பக்குவப்படுத்தி அரிசி எடுத்து அதிலிருந்து பொரி உற்பத்தி செய்து வந்தோம். ஆனால் தற்போது கர்நாடகா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் விளைவிக்கப்படும் குறிப்பிட்ட ரக நெல்லை பொரி உற்பத்திக்காக அரிசியாக்கி விற்பனை செய்து வருகிறார்கள். அவற்றை கொள்முதல் செய்து பொரி உற்பத்தி செய்கிறோம்.கடந்த ஆண்டில் ஒரு கிலோ அரிசி ரூ.38-க்கு கிடைத்தது. தற்போது ரூ. 45 கொடுத்து வாங்கியுள்ளோம்.
அத்துடன் சர்க்கரை, உப்பு, எரிபொருள், மின் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளது.ஆனால் 110 லிட்டர் கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ. 460-க்கு தான் விற்பனை செய்கிறோம். ஆனாலும் 30 சதவீத அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது. முன்பெல்லாம் ஆயுத பூஜைக்கு பொரி, கடலை, சுண்டல், ஆரஞ்சு மிட்டாய் உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்வதுடன் தொழிலாளர்களின் வீடுகளுக்கும் கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்போது பெரும்பாலும் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை
கிராமங்களில் உள்ள ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் பொரி உருண்டை தொங்கிய காலம் போய் விதம் விதமான நொறுக்குத்தீனிகள் தொங்கும் நிலை உருவாகி விட்டது. வீட்டுக்கு விருந்தாளி வந்தால் பொரி உருண்டை வாங்கி வந்த காலம் மலையேறி விட்டது. சுவைக்கு அடிமையாகி பாரம்பரியத்தையும் ஆரோக்கியத்தையும் தொலைத்து விட்டோம். மேலும் உற்பத்தியிலும் பல சிரமங்களை சந்தித்து வருகிறோம். நெருப்பில் செய்யும் வேலை என்பதால் பலரும் வேலைக்கு வர தயங்குகிறார்கள். இதனால் ஆட்கள் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் முழுக்க முழுக்க எந்திரமயமாக்கி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படக் கூடும். பொரி உற்பத்தியில் அனுபவம் மிக்க தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது.ஏனென்றால் சரியான அளவு சூட்டில் பதமாக வறுக்கத் தவறினால் அரிசி பொறியாமல் கெட்டியாகி வீணாகி விடும்.வெயில் காலங்களில் அரிசியை காய வைத்து உற்பத்தி செய்வது எளிது. ஆனால் விற்பனை குறைந்து விடும். மழைக்காலங்களில் பொரி உற்பத்தி செய்வது சிரமமாக இருக்கும்.ஆனால் விற்பனை அதிகரிக்கும்.இப்படி பல சிரமங்களுக்கு மத்தியில் பரம்பரை தொழிலாக இதனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-