கிராம வரையறை எல்லைக் கற்கள் சீரமைக்கப்படுமா?


கிராம வரையறை எல்லைக் கற்கள் சீரமைக்கப்படுமா?
x

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கிராம வரையறை எல்லைக் கற்கள் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட கிராம வரையறை எல்லைக் கற்கள் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எல்லைக்கற்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராமங்களின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டபோது அந்த எல்லைகளை குறிக்கும் விதமாக பிரம்மாண்டமாக செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட எல்லைக்கற்கள் பல இடங்களில் சேதமடைந்தும், இடிந்தும் காணப்படுகின்றன.இது குறித்து வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள எஞ்சியுள்ள கற்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கிராமங்களில் உள்ள நிலங்களை அளவீடு செய்து, அதற்காக சர்வே எண் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

சர்வே எண்கள்

அப்போது ஒவ்வொரு கிராமத்தின் எல்லைகளிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கற்களை கொண்டு 8 அடி உயரத்தில் கிராம எல்லைகளை குறிக்கும் வகையில் பிரம்மாண்டமான எல்லை கற்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் கிராமங்களின் உள்பகுதிகளில் பல சர்வே எண்கள் இருக்கும். ஒவ்வொரு சர்வே எண்களுக்கும் கருங்கற்களால் அம்புக்குறியீடு பொறிக்கப்பட்டு சர்வே எல்லைக்கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.காலப்போக்கில் கிராம எல்லைகளை குறிக்கும் இந்த பிரம்மாண்ட எல்லைக்கற்கள் சேதம் அடைந்துவிட்டன. தற்போது சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் சேதமடைந்த நிலையில் உள்ள எல்லைக்கற்களை சீரமைத்து, முற்றிலும் சேதமடைந்த எல்லைக் கற்களுக்கு பதில் புதிய எல்லைக்கற்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதம் அடைந்துள்ளன

இது குறித்து ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் கூறும்போது, ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் கிராம கணக்குகள் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டன. அப்போது ஒவ்வொரு கிராமத்திலும் மனைப்பகுதிகள், விவசாயப்பகுதிகள் என பிரிக்கப்பட்டன. இதில் விவசாய நிலங்கள் அடங்கிய பகுதிகள் கிராமத்தின் அடிப்படையில் சர்வே எண்கள், புல எண்கள் வழங்கி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டன.அப்போது இதற்காக கிராம எல்லைக்கற்கள் அமைக்கப்பட்டன. கிராமத்தின் எல்லைகளில் மிக முக்கியமான இடங்களில் இந்த எல்லைக்கற்கள் அமைந்திருக்கும். ஆனால் காலப்போக்கில் இந்த எல்லைக்கற்கள் சேதம் அடைந்துள்ளன. எல்லைக்கற்கள் குறித்து வருங்கால தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் விதமாக சேதமடைந்துள்ள கிராம எல்லைக்கற்களை வருவாய்த்துறையினர் சீரமைக்க வேண்டும் என்றனர்.

சீரமைக்க வேண்டும்

இது குறித்து விவசாயிகள் சிலர் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் இந்த கிராம எல்லைக்கற்கள் இருந்தன. தற்போது வேங்கராயன்குடிக்காடு பகுதியில் நாஞ்சிக்கோட்டை-கொ.வல்லுண்டான்பட்டு கிராம வருவாய் எல்லைகளை பிரிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கற்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே எல்லைக்கற்கள் எஞ்சியுள்ளன. அவையும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவற்றை மீண்டும் சீரமைத்து அமைக்க வேண்டும் என்றார்.


Next Story