சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமி கர்ப்பம்
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை பெற்றோர் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள தாய் வீட்டிற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
சிறுவன் கைது
இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை தொடர்ந்து போலீசார் கேரளாவிற்கு விரைந்து சென்று, அந்த சிறுமியை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும், அந்த சிறுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த சிறுவனை கைது செய்து கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.