மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் சாவு
மதுரையில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள கலெக்டர் பங்களா அருகே, மனவளர்ச்சி குன்றியோருக்கான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்கள், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தங்கி உள்ளனர். இங்கு, மேலூர் தத்துப்பட்டியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகன்களான ராமன், லட்சுமணன் (வயது 10) ஆகியோர் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள மழைநீர்சேகரிப்பு தொட்டி அருகே லட்சுமணன் உள்ளிட்ட சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, லட்சுமணன் எதிர்பாராத விதமாக அந்த மழை நீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டான். இதனால், அங்கு தேங்கி கிடந்த நீரில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.