காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்பு
குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான்.
காவிரியில் மூழ்கிய சிறுவன்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்குட்பட்ட கழுகூர் பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 26) என்பவருக்கு சில பிரச்சினைகள் இருந்து வந்த காரணத்தால் தனது ஊரில் பரிகாரம் செய்துள்ளார். பின்னர் பரிகாரம் செய்யப்பட்ட தகடை ஆற்றில் விடுவதற்காக குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்று பகுதிக்கு கடந்த 20-ந்தேதி வந்தார்.
இவருடன் அதே ஊரைச் சேர்ந்த சுரேந்தர் (17), அருண்குமார் (22) ஆகிய 2 பேரும் வந்தனர். அவர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, தண்ணீரின் வேகம் காரணமாக சுரேந்தர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டு மூழ்கினான். இதைப்பார்த்த கலையரசன் அவரை காப்பாற்ற முயற்சித்தபோதும் சுரேந்தரை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு படைவீரர்கள், குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடந்த 2 நாட்களாக காவிரி ஆற்றில் சல்லடைபோட்டு தேடியும் சுரேந்தரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பிணமாக மீட்பு
இந்தநிலையில் நேற்று குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றுப் பகுதியின் நடுவில் உள்ள மேடான பகுதியில் ஒருவரது உடல் தண்ணீரில் மூழ்கியபடி இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள், குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமூக ஆர்வலர்கள் உதவியுடன் அந்த உடலை கைப்பற்றி கரைக்கு ெகாண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரேந்தரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்த்து சுரேந்தர் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் சுரேந்தரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.