காவிரி ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர்- பெண் உடல்கள்


காவிரி ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர்- பெண் உடல்கள்
x

கரூர் அருகே காவிரி ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர், பெண் உடல்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

கரை ஒதுங்கிய பிணங்கள்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றின் கரை ஓரம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதந்து கிடந்தது. அதேபோல் சுமார் 32 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த திட்டில் சிக்கி பிணமாக மிதந்து கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி 2 பேரின் உடல்களையும் மீட்டனர். தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவிரி ஆற்றில் குளித்தவர்

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், காவிரி ஆற்றில் நடு திட்டில் சிக்கி பிணமாக மிதந்து கிடந்தவர் நாமக்கல் மாவட்டம் மேட்டுத்தெருவை சேர்ந்த ஜெகநாதன் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் நாமக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2-ந்தேதி தனது உறவினர்களுடன் மதியம் நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணையில் குளித்தபோது, அவர் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. இதையடுத்து ஜெகநாதனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு அவர் ஜெகநாதன் தான் என்பதை உறுதி செய்தனர்.

போலீசார் விசாரணை

அதேபோல் காவிரி ஆற்றின் ஓரத்தில் கரை ஒதுங்கிய பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த 3 நாட்களாக காணவில்லையாம்.

இதுகுறித்து கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புகார் கொடுத்தவர்கள் நேரில் வந்து அந்த பெண்ணின் உடலை பார்த்த பிறகு தான் இறந்தவர் யார்? என்பதை உறுதி செய்ய முடியும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story