தெருநாய்கள் கடித்து சிறுவன் காயம்: துறையூர்- திருச்சி சாலையில் பொதுமக்கள் மறியல்


தெருநாய்கள் கடித்து சிறுவன் காயம்: துறையூர்- திருச்சி சாலையில் பொதுமக்கள் மறியல்
x

தெருநாய்கள் கடித்து சிறுவன் காயம் அடைந்ததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் துறையூர்- திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

தெருநாய்கள் கடித்து சிறுவன் காயம்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டு மலையப்பன் சாலையில் வசிப்பவர் சிவக்குமார். இவருடைய மகன் ரவீன் (வயது 9). இவன் தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டவாறு திரிந்தன. இதில் எதிர்பாராதவிதமாக சிறுவன் ரவீனை தெருநாய்கள் கடித்தன.

இதில், கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட சிறுவன் வலியால் அலறித்துடித்தான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தெருநாய்களிடம் இருந்து சிறுவனை மீட்டனர். பின்னர் அந்த சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சாலை மறியல்

மலையப்பன் சாலையில் சுற்றித்திரியும் பன்றிகள் மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகராட்சி கூட்டத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் 23-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சரோஜா தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுவனுடன் துறையூர்- திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், தெருநாய்களை கட்டுப்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story