மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் சாவு; தந்தை, அக்காள் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்தான். அவனது தந்தை, அக்காள் படுகாயமடைந்தனர்.
அன்னவாசல்:
கார் மோதியது
அன்னவாசல் அருகே உள்ள சேந்தாமங்கலத்தை சேர்ந்தவர் ராசு(வயது 45). இவர் தனது மகள் மகேஸ்வரி(13), மகன் சுபாஷ்(10) ஆகியோருடன் வீட்டில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்றார். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். புதுக்கோட்டை- குடுமியான்மலை சாலையில் மேலபளுவஞ்சி என்ற இடத்தில் வந்தபோது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அருகில் இருந்து மின்மாற்றியின் கம்பத்தின் மீது மோதி நின்றது.
இதில் ராசு, மகேஸ்வரி, சுபாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மின்கம்பம் சேதமடைந்தது. கார் டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து டிரைவரை உடனடியாக கைது செய்யக்கோரி ராசுவின் உறவினர்கள் புதுக்கோட்டை-குடுமியான்மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாவு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டு, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபாஷ், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற கார் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.