'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற அடிப்படையில் பிரம்ம குமாரிகள் இயக்கம் செயல்படுகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் பிரம்ம குமாரிகள் இயக்கம் செயல்படுகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x

அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் பிரம்ம குமாரிகள் இயக்கம் செயல்படுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

மண்டல பொன்விழா

பிரம்ம குமாரிகள் இயக்கம் தமிழகத்தில் முதன் முதலாக 1970-ல் தொடங்கப்பட்டது. இதையொட்டி அந்த இயக்கத்தின் தமிழக மண்டல பொன்விழா கொண்டாட்டத்தின் முதல்நாள் விழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று மாலை 'அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டார். கருத்தரங்கில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் கூடுதல் நிர்வாக தலைவர் ராஜ யோகினி ஜெயந்தி, கூடுதல் பொதுச்செயலாளர் ராஜயோகி பிரிஜ் மோகன் ஆகியோர் பிரம்ம குமாரிகள் இயக்கம் குறித்து பேசினர்.

ஒன்றே குலம், ஒருவனே தேவன்

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டிய நிலையில், இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சரிடம் கூறினோம். அவர் என்ன நிகழ்ச்சி என்று கேட்டார். பிரம்ம குமாரிகள் நிகழ்ச்சி என்று சொன்னதும், முதலில் அங்கே செல்லுங்கள், அதுதான் நமக்கு முக்கியம், அதை முடித்து விட்டு பொதுக்குழு பணிகளை பார்வையிடுங்கள் என்று கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியாக இருந்தாலும் சரி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினாக இருந்தாலும் சரி ராக்கி கயிறு கட்ட வந்தால் முதலில் அவர்களை வரச்சொல்லுங்கள் என்று சொல்வார்கள்.

ஒட்டுமொத்தமாக உங்களின் எண்ணங்கள் என்பது அமைதியான ஒரு மனிதம் வேண்டும், எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான். எங்கள் இயக்கத்தின் நிறுவனர் அண்ணா 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று சொன்னார். நீங்களும் அப்படிதான். அமைதி, சமாதானம் என்ற வகையில் பணியாற்றி கொண்டு இருக்கிறீர்கள்.

சமத்துவபுரமாக மாற வேண்டும்

மன அழுத்தம் இல்லாத மன அமைதி பூமியை வடிவமைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு தியானம் மிக அவசியம். நாங்களும் கல்வி நிலையங்களில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்கு தகுந்தாற்போல் எங்கள் திட்டங்களை வடிவமைத்து கொண்டு இருக்கிறோம். அடக்கப்பட்ட மனம்தான் நமக்கு நண்பனாக இருப்பான். அடக்கப்படாத மனம் என்றைக்கும் நமக்கு விரோதிதான் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

எங்களுடைய திராவிட மாடல் புத்தகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது இதுதான். நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்று சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் 'கல்ப தரு' என்ற மரம் வளர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பிரம்ம குமாரிகளின் டெல்லி பயிற்சி மைய இயக்குனர் ஆஷா, ஊடக பிரிவு தலைவர் கருணா, தமிழ்நாடு மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா, அடையாறு கிளை பொறுப்பாளர் முத்துமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story