பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா


பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

150 ஆண்டுகளுக்கு பிறகு பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. கல்தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் கி.பி.7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய, தென்அஹோபிலம் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி இக்கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் மேள, தாளம் மற்றும் மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. பின்னர் லட்சுமி நரசிம்மர் சாமி வீதியுலா நடைபெற்றது. 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ திருவிழா தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 6-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 8-ந் தேதி திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் லட்சுமி, கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story